SaraNextGen.Com

Chapter 11 - Nanmaiye nalam tarum - Chapter 11 Term 3 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்குத் தாய்கூறிய அறிவுரை யாது?
Answer:
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்கு, அவனுடைய தாய் “நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது. தாயிடமிருந்து பிரித்துவிட்டால், அவை மிகுந்த துன்பமடையும்” என்று அறிவுரை கூறினாள்.

Question 2.
தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில், பீட்டர் செய்த செயல் யாது?
Answer:
தமிழ்மணியின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த பீட்டர், அங்கு மரத்தில் இருந்த பறவைக் கூட்டின் மீது கல்லெறிந்தான்.

Question 3.
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன கூறினான்?
Answer:
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி, “பீட்டர், ஏன் இப்படிச் செய்தாய்? அந்தப் பறவைக் குஞ்சுகள் பாவம் இல்லையா? நீ எறிந்த கல் அந்தச் சின்னஞ்சிறிய பறவைக் குஞ்சுகளின் மேல் பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்று தானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை ” என்று கூறினான்.

Question 4.
உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துத் தமிழ்மணியின் தந்தை என்ன கூறினார்?
Answer:
தமிழ்மணியின் தந்தை கூறியது :
நம்மைப் போலத்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா” என்று தமிழ்மணியின் தந்தை உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துக் கூறினார்.

சிந்தனை வினா.

நீங்கள் செல்லும் வழியில் நாய்குட்டியொன்று நடக்க முடியாமல் துன்பப்படுகிறது. அதற்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்?
Answer:
நான் ஒருநாள் பள்ளியில் இருந்து என் அப்பாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையோரத்தில் ஒரு நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்து வேகமாக வந்ததில் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியதில் அதனுடைய காலில் அடிபட்டுவிட்டது.

நான் என் அப்பாவிடம் அந்த நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன். அப்பாவும் சரியென்று கூறிவிட்டு அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம். அதற்கு ஊசி போட்டு, கொஞ்சம் மாத்திரைகளைக் கொடுத்தனர். வீட்டிற்குத் தூக்கி வந்து அதற்குப் பால் சாதம் கொடுத்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தேன். இரண்டு நாட்கள் தொடர்ந்து கொடுத்தேன். அந்த நாய்க்குட்டி பழையபடி நன்றாக நடந்தது. அதற்குப் பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

கற்பவை கற்றபின்

Question 1.
இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
நன்மையே நலம் தரும்

தமிழ்மணியின் வீட்டில் உள்ள தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் இருப்பதால், அங்கு எப்போதும் குளிர்ந்த தூய்மையான காற்று இருக்கும். மாலைநேரத்தில், தமிழ்மணி அங்குள்ள மரக்கிளையில் ஊஞ்சல் ஆடுவான். அம்மரக்கிளையில் பறவையொன்று கூடுகட்டியிருந்தது. அதில் இரண்டோ மூன்றோ பறவைக் குஞ்சுகள் இருந்தன.

தமிழ்மணி தன் தந்தையிடம் “தாய்ப் பறவை இல்லாத நேரத்தில் பறவைக் குஞ்சுகளை எடுக்கட்டுமா?” என்று கேட்டான். உடனே அவன் அம்மா, அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தாயிடமிருந்து பிரித்துவிட்டால் பறவைக் குஞ்சுகள் துன்பமடையும் என்றும் அறிவுறுத்தினாள்.

தமிழ்மணியின் பிறந்த நாளன்று அவனுடைய நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தோட்டத்தில் விளையாடினர். நண்பர்களுள் ஒருவரான ரஷீத் பறவைக் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்து அனைவருக்கும் கூறினான். அப்போது எதிர்பாரா வகையில் மற்றொரு நண்பன் பீட்டர் அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான். அக்கல் கிளையில் பட்டு பூந்தொட்டியின் மீது விழுந்தது. இதைக் கண்டதும் தமிழ்மணிக்குச் சினம் வந்தது.

பீட்டரிடம் “உன் வீட்டை யாராவது இடித்தால் நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்?” அது போல் தானே இப்பறவைகளும், நீ ஏன் புரிந்து கொள்ளவில்லை” என்று படபடவெனப் பேசினான் தமிழ்மணி. பீட்டர் தன் தவற்றை உணர்ந்து தலைகுனிந்து நின்றான்.

அப்போது அங்கு வந்த தமிழ்மணியின் பெற்றோர் நடந்ததை அறிந்தனர். “இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் நம்மைப் போலத்தான். அவற்றிடம் அன்பு காட்ட வேண்டும். நமக்கு வலிப்பது போல் அவற்றிற்கும் வலிக்கும்.” என்று தமிழ்மணியின் தந்தை கூறினார்.

தமிழ்மணியும் நண்பர்களும் “இனி நாங்கள் யாரையும் துன்புறுத்தமாட்டோம்” என்று உறுதி கூறினர். மேலும், பறவைகளின் கூடுகளைப் பாதுகாப்போம் என்றனர்.

பறவைகளுக்குத் தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவுவோம் என்று உறுதி அளித்தனர். பிறர்க்கு உதவுவதே சிறந்த பிறந்த நாள் பரிசு என்று தமிழ்மணியை வாழ்த்திச் சென்றனர்.

Question 2.
நீங்கள் விலங்குகளிடம் அன்பு காட்டிய நிகழ்வொன்றை அனைவருக்கும் கூறுக.
Answer:
நான் கோடை விடுமுறையில் என் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றேன். எங்கள் தாத்தா வீட்டில் பெரிய தோட்டம் உள்ளது. வீட்டைச் சுற்றியும் பூச்செடிகளும் மரங்களும் நிறைந்துள்ளன.

ஆடு, மாடுகள் உள்ளன. செல்லப் பிராணியான நாய், பூனையும் உள்ளன. பச்சைக்கிளி, புறா ஆகிய பறவைகளும் உள்ளன. கோழி, சேவல் ஆகியவற்றையும் – வளர்க்கின்றனர். என் தாத்தா வீட்டிற்குச் சென்றால் எனக்கு நேரம் போவதே தெரியாது.

தினமும் நான் அவற்றிற்கு வேண்டிய தீனியைப் போடுவேன். அவைகளுக்கென வைக்கப்பட்ட கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றுவேன். அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். விடுமுறை முழுவதும் அவற்றை அன்பாகப் பார்த்துக் கொள்வதுதான் என் முழுநேர வேலையாகும்.

Also Read : Chapter-12---Maraputtotarkal-Chapter-12-Term-3-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen